செவ்வாய், 13 ஜனவரி, 2015

Disclaimer: This not my usual "on the light-side" blog!

அப்பா...
ஐந்து வருடங்களில் மூன்று இழப்புகள். இதில் என்னை மிகவும் பாதித்தது சமீபத்திய என் அப்பாவின் மரணம். இதற்கும் நான் ஒன்றும் "அப்பா பெண்" கிடையாது. ஒரு வேளை, என் அம்மா மற்றும் அண்ணாவின் மரணங்களை அருகில் இருந்து பார்க்காததும், அப்பாவின் மரணத்தை அணு அணுவாக அருகில் இருந்து பார்த்ததாகவும் இருக்கலாம். இத்தனைக்கும் இது ஒரு கல்யாண சாவு - 84 வயதில் பேரன், பேத்தி, கொள்ளு பேத்தி என்று பார்த்த, சுற்றி உறவுகள் இருந்த ஒரு மரணம். மரணத்துக்குப் பின்னான வாழ்வை பற்றி என்னை நினைக்க வைத்த ஒரு மரணம்.
அப்பா - எந்த சூழ்நிலையிலும் தன்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ள தெரிந்த ஆத்மா. உணவு ரசிகர். அவர் சாப்பிடும் விதமே அலாதி. ரசத்தில் உள்ள கடுகுகளை தனியாக பிரித்து உண்பதிலாகட்டும், பருப்பு பொடி சாதத்தில் ரசத்தை விட்டு சாப்பிடுவதில் ஆகட்டும் - ஒரு நேர்த்தி, ஒரு ரசிப்பு இருக்கும். கடைசிவரை தன் பாசத்தை பிள்ளைகளிடம் வெளிப்படுத்தாமலே வாழ்ந்தவர். டிவி சீரியல் பிரியர். பேரன் பேத்திகளுக்கு சமமாய் போட்டி போட்டவர், சிரித்து கலாய்த்து வம்பு செய்தவர். கடைசி தினங்களிலும் என் மகளுடன் சம வயதுக்காரர் போல டிவி க்காக சண்டை போட்டவர். தனக்கும் மரணம் என்று ஒன்று உண்டென்றே அவர் எண்ணி இருப்பாரா என்பதே சந்தேகம் தான். வாழ்வின் மேல் அப்படி ஒரு பற்று கொண்டவர்.
இப்படி பட்ட அவர், கடைசி தினங்களில் உண்ண முடியாமல் பட்ட அவதி இன்னும் என் மதில் பாரமாய்! நினைவலைகள் தப்பியும், "TV you tube-ல் படம் போடட்டுமா அப்பா?" என்று கேட்டதும், தினம் ஒன்றாக ஒளவையார், கர்ணன் என்று பழைய படங்களை போடச் சொல்லி பார்த்த அவரின் வாழ்வின் மேல் பிடித்தம் இன்னும் ஆச்சர்யமாய்! 
அக்டோபர் 6 - அன்று தான் கடைசியாய் என் வீட்டில் இருந்து கிளம்பி ஆஸ்பத்திரி போனார் - மீண்டும் திரும்பி வராமலே. தீனமாய் நடந்து படி தாண்டும் போது என்ன நினைத்திருப்பார் - மீண்டும் திரும்பி வருவோம் என்றா? இல்லை, தான் வாழப்போவது இன்னும் சில மணி நேரங்கள் தான் என்றா? அன்று இரவு ஆஸ்பத்திரியில், என்  கன்னத்தை தடவி "ரொம்ப தேங்க்ஸ் மா" என்ற போது அது தான் தான் பேசும் கடைசி வாக்கியம் என்று அறிந்திருப்பரா?
இன்றும் நள்ளிரவில் கண் விழித்தால், அவர் அறையில் "ராதா சமேதா கிருஷ்ணா" என்று கரகரத குரலில் அவர் பாடும் சப்தம் கேட்கிறது. இனி என் வாழ்வில் யார் பாடியும் அந்தப் பாடலைக் கேட்க முடியாது என்றே தோன்றுகிறது.

1 கருத்து:

  1. "ரொம்ப தேங்க்ஸ் மா" --- He showed you by this gesture that you were 'his' daughter indeed. Such affection cannot be manufactured. Only what is inside comes out...

    "கடைசிவரை தன் பாசத்தை பிள்ளைகளிடம் வெளிப்படுத்தாமலே வாழ்ந்தவர்" --- He expressed it to you at the last moment, did'nt he? .

    So beautifully written. Full of Love. May his soul rest in peace.

    பதிலளிநீக்கு