ஞாயிறு, 18 டிசம்பர், 2016

"பிறந்த" வீடு


முன் குறிப்பு: நான் பிறந்து வளர்ந்த வீட்டை விற்ற ஒரு நாளில் எழுதியது.

முன் குறிப்பு: நான் பிறந்து வளர்ந்த வீட்டை விற்ற ஒரு நாளில் எழுதியது.

பிறந்து வளர்ந்த வீட்டை விற்பது ஆனதிலும் கொடுமை வேறில்லை.
தண்ணீர் சேந்திய கிணற்றை மூடிய சோகமே இன்னும் நெஞ்சை அடைக்க,
அதற்குள் வீட்டை கிரயம் செய்த துக்கத்தை எங்கே போய் சொல்ல?

நடை பழகிய முற்றம்
அனைவரும் ஒன்றாய் கதை பேசிப் படுத்துறங்கிய கூடம்
நடுவே இருந்த இருட்டு உள்
அண்ணனுடைய வாசல் உள்
அம்மா பெரும்பொழுதை கழித்த சமையலறை
எலுமிச்சையும், கொய்யாவும், வாழையும், ரோஜாவும், மல்லியும் பூத்துக்குலுங்கிய புழக்கடை


இவை அனைத்தினும் மேலாக தாய் மடியை விடவும் நான் அதிகம் கிடந்த மொட்டை மாடி
பிதாகரஸ் தியரமும் கெமிக்கல் ஈக்வேஷனும் அழித்து அழித்து நான் எழுதிய அதன் தரை
நட்புக்களுடன் அமர்ந்து மணிக்கணக்கில் கதை பேசிய அதன் பிடி சுவர்
நாலிரண்டாக தாவி இறங்கிய மாடிப்படிகள்
மறக்குமோ அந்த நாட்கள்?

எதிர் வீட்டு பேபி மாமி, அதன் அடுத்த வீட்டு துளசி டீச்சர்
இடப்பக்க வீட்டு ஜெயா அக்கா, வலப்பக்கத்தில் அரிசிக்கடை வீடு
தெருவின் நடுவில் ஆயில் கடை வீடு, அது தாண்டி சிங்காரம் பிள்ளை பள்ளி
முனுசாமி கடை, மாஸ்டர் எம்போரியம், டி கே ப்ரதர்ஸ், அய்யாசாமி கடை, ரஞ்சித் ஹோட்டல் பரோட்டா.

இவை எல்லாம் மட்டுமா இனி அந்நியம்?

தாமோதரப் பெருமாள், வரசித்தி விநாயகர், பாலியம்மன், அகஸ்தீஸ்வரர்
இவர்களும் அல்லவா இனி அந்நியம்?

வீட்டை வாங்கியவரிடம் சாவியைத் தந்து படியிறங்கும் பொது இறுதியாய் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன்.
இறந்து மீண்டும் ஒரு முறை பிறந்தேன்.

 உடல் வேறாய் மனம் வேறாய் இறக்க முடியும் என்று அறிந்த தருணம் அது!

முன்பெல்லாம் வில்லிவாக்கம் என்ற பேரைக் கேட்டால் கண்களில் ஒரு மின்னல் தோன்றும்.
இனி, அப்பெயர் கேட்டால் கண்களில் இரு துளி கண்ணீர் தோன்றும்.
பிறந்த மண்ணின் வேரினை அறுத்து பிழைப்புக்காக வேறிடம் விழுதை நடுகின்றேன்
நாளை என் பெண்ணும் இவ்வாறு அழுதிடுவாளோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக