வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

அந்நியன் ஆன ஆனியன்

மு.கு. :
) இந்தப் பதிவு பள்ளிக்கால நினைவுகளை எழுதுமாறு கேட்டிருந்த என் நண்பர்களுக்காக.
)ஆனியனுக்கும் பள்ளிக்கால நினைவுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று வியப்பவர்களுக்கு விடை, பதிவின் முடிவில்.
)அந்த சம்பந்தத்தை பதிவின் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தவர்கள், நமது பள்ளி தாளாளர் பிறந்தநாள் அன்று பள்ளி சென்று லட்டை பரிசாக பெற்றுக்கொள்ளவும்.

எங்கள் பள்ளியில் பயாலஜி பிரிவின் தலைவர் திருமதி. அக்கம்மா தாமஸ். இவரை எங்கள் எல்லாருக்கும் 'மிகவும் பிடிக்கும்'. எவ்வளவு பிடிக்கும் என்பதற்கு ஒரு உதாரணம். எல்லோரும் தம் பள்ளி ஆசிரியர்களுக்கு புனைப்பெயர் வைப்பார்கள். நாங்கள் ஒரு படத்தின் பாடலையே அவருக்காக மாற்றி எழுதி இருந்தோம். அது தளபதி படம் வந்த புதிது. அப்படத்தில் வரும் 'ராக்கம்மா கைய தட்டு' பாடலையே நாங்கள் ' அக்கம்மா கைய தட்டு' என்று மாற்றி படும் அளவுக்கு அவர் மேல் பிரியம். இத்தனைக்கும் அவர் எங்களையெல்லாம், "I will fix you in the practicals" என்று அன்பைப் பொழிந்ததெல்லாம் இல்லை! (மேற்சொன்னவாறு அன்பைப் பொழிந்த அருணா மிஸ்ஸைப் பற்றி வேறொரு பதிவில் பார்க்கலாம்.) இவரை மட்டும் அல்ல. பயாலஜி பிரிவில் இருந்த மற்ற ஆசிரியர்களான 'கண்ணாடி' சுரேஷ் சார் மற்றும் எலிகேசி என்று அன்புடன் அழைக்கப்பட்ட புலிகேசி சேனாபதி சாரையும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இப்போது ஆனியனுக்கு வருவோம். இவ்வாறு நாங்கள் பேரன்பு கொண்டிருந்த அக்கம்மா மிஸ் ஒரு மலையாளீ. அவர் ஆனியனுக்கு கொடுத்திருந்த மற்றொரு "பயாலாஜிகல்" பெயரே அணியன். அவரின் முதல் வகுப்பே எங்களுக்கு ஆனியனைப பற்றியது தான். அவரின் உச்சரிப்பு புரியாததாலும், அதுவரை பாட புத்தகம் (எப்போதும் போல்) வெளிவராததாலும் அணியன் எது என்று எங்களுக்கு பல நாட்க்களுக்கு புரியாமல் போய் ஒரு வித பயாலஜிகல் ஜுரமே வந்து விட்டது. பயாலஜி பய அலர்ஜி ஆகிப்போனது. பின்னர் பாட புத்தகம் வந்ததும், நாங்கள் முதலில் பிரித்துப் படித்தது அணியன் தான். அன்று நாங்கள் சிரித்த சிரிப்பு.... ஜுரம் விட்டதால் வந்த சிரிப்பு!!!

இந்த நிகழ்ச்சியின் பின், அணியன் எனப்பட்ட ஆனியனை என்றும், எப்போதும், எந்த வடிவிலும் பார்த்தாலும் எனக்கு அக்கம்மா மிஸ்ஸின் ஞாபகம் தவறாமல் வரும். இப்படிப்பட்ட அக்கம்மா மிஸ்ஸை நான் சிலவருடங்களாக மறந்து போனேன். அதுவும் என் மகளால். அவளுக்கு எந்த உணவிலும் வெங்காயம் ஏனோ பிடிக்காமல் போனது. (ஒரு வேளை அவளுக்கும் அக்கம்மா என்ற பெயரில் யாராவது ஒரு டீச்சர் வந்தால் அதன் பின் பிடிக்கலாம்!) அதனால் நாங்கள் எங்கள் உணவில் பெருமதிப்பிற்குரிய ஆனியனை தவிர்த்தோம். இவ்வாறாக, அணியன் எனப்பட்ட ஆனியன் எங்களுக்கு அந்நியனாகிப் போனது!



புதன், 19 ஆகஸ்ட், 2009

இன்றும் அன்றும்

இன்று:
இன்று காலை ஏழு மணிக்கு அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். எதிர்ப்புறச் சாலை காலியாக இருந்ததால், முன்னே சென்ற ஒரு காரை வலது புறமிருந்து ஓவர்டேக் செய்தேன். அப்போது எதிர்பாராமல் எதிரே வந்த ஆட்டோவிலிருந்து கன்னடத்தில் ஒரு குரல். ஆடோக்காரர் கன்னடத்தில் ஏதோ திட்டிச்சென்றார். அது முக்கால் வாசி "சாவுக்ராக்கி"யாக இருக்கக்கூடும்!

அன்று:
எங்கள் ஏரியா தவிர வேறு எங்கும் சைக்கிள் ஓட்டியிராத நானும் என் தோழியும் ஒரு நாள் முதல் முறையாக சைக்கிளில் கல்லூரி சென்று கொண்டிருந்தோம். அதுவரை என் பக்கத்தில் வந்து கொண்டிருந்த என் தோழி, திடீரென வலது பக்கம் ஓட்ட துவங்கி இருந்தாள். அப்போது எதிர்ப்பக்கம் ஒரு கார் வேகமாக வந்தது. அந்தக் கார் டிரைவர் வேகத்தைக் குறைத்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. அவர் பின்பு எங்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு "இந்தியா மேடம் இந்தியா" என்று சொல்லி சென்றார்!!

பி.கு. :
) காரோட்டியின் 'இந்தியா மேடம் இந்தியா' புரியாதவர்கள், பின்னூட்டத்தில் விளக்கம் கேட்க்கவும்.
) இவ்வாறு 'அன்றும்-இன்றும்' நிகழ்வுகள் சிலருக்கு அளவுக்கு அதிகமாக வருவதன் காரணம் அறிந்தவர்கள் பின்னூட்டத்தில் விளக்கம் கூறவும்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

நினைவில் நின்றவர்கள் - அய்யங்கார் மாமா

எங்கள் வீட்டின் எதிரே இருந்த லாலா தோட்டம் எனப்படும் பெரிய காம்பௌண்டில் நான்கு சிறிய ஓட்டு வீடுகள் இருந்தன. அவற்றுள் ஒன்றில் வசித்தவர் தான் அந்த காம்பௌண்டின் care taker ஆக இருந்த அய்யங்கார் மாமா. அவரின் நிஜப்பெயர் யாருக்கும் தெரியுமா என்பது சந்தேகம் தான். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவர் 'தாத்தா' தான். ஆனாலும் என் வயதோத்தவரும் என்னைவிட சிறியவரும் கூட அவரை 'அய்யங்கார் மாமா' என்று தான் அழைத்தோம். அவர் அய்யங்கார் மாமா ஆனதால் அவரது மனைவி அய்யங்கார் மாமி ஆனார்.

அந்த நாட்க்களில் எங்கள் வீடுகளுக்கு ஒரு நெய்க்காரர் டின்னில் நெய் கொண்டு வந்து விற்பது வழக்கம். ஆந்த நெய்க்கரர் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கையில் சிறிது நெய்யை கொசுறாக கொடுப்பதும் வழக்கம். எங்கள் வீடுகளில் அவர் அரைக்கிலோ நெய் விற்றால் இரண்டு அல்லது மூன்று கரண்டி நெய் கொசுறாக வந்திருக்கும். ஆனால் அவர் அய்யங்கார் மாமா வீட்டில் அரைக்கிலோ நெய் விற்றால் ஒரு கிலோ நெய் கொசுறாக சென்றிருக்கும்! அவர்கள் வீட்டில் அத்தனை குழந்தைகள்!!

மாமா கடைக்கு சென்று காய் வாங்கும் விதமே அலாதி. அவர் மார்கெட்டிற்கு சென்று முதலில் பார்ப்பது முட்டை கோஸ் விற்கும் கடையை. அந்த கடைக்காரன் விற்ப்பதற்கு முன் வெட்டி போட்டிருக்கும் முட்டை கோசின் மேல் தாள்கள் தான் அவர் வீட்டிற்கு கோஸ் ஆக வரும். அவர்கள் வீட்டில் மெனுவில் பல நாட்கள் கோஸ் 'கரமது' இருக்கும். அதே போல் அவர் கிலோ கணக்கில் எந்தக் காயையும் வாங்கி நாங்கள் பார்த்ததில்லை. எல்லாமே கூறு கட்டி விற்கப்படும் காய்கள் தான்.

நாங்கள் சிறுவர்களாக இருந்த அந்த காலங்களில் எங்களுக்கு எப்போதும் வியப்பை தருவது அவர் வைத்திருந்த புகையிலை பெட்டியும் (அந்தக்கால தகர பெருங்காய டப்பா) அவரது நாமக்கட்டி பெட்டியும். அவர் இல்லாத நேரத்தில் அந்த டப்பாக்களை திறந்து நோண்டுவது எங்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று. அவ்வாறு நாங்கள் நோண்டும் நேரம் அவர் வந்து விட்டால், "ஏண்டா இப்டி அநியாயம் பண்றேங்கோ?" என்று கத்திக்கொண்டு அவர் எங்களை விரட்டுவதும் நாங்கள் அவர் கைகளில் சிக்காமல் ஓடுவதும் அடிக்கடி நிகழும் ஒன்று.

அவருடைய பேரன்களில் ஒருவன் தான் பாய் எனப்படும் பாலாஜி. நான், பாய், மற்றும் ராஜா மூவரும் ஒரே வகுப்பில் படித்தோம். அப்போதெல்லாம் நான் படிப்பில் புலி (மற்ற இருவரோடு ஒப்பிட்டால் என்று படிக்கவும்). அதனால் தினமும் சாயந்திரம் மாமா என் நோட்டு புத்தங்கங்களை வாங்கி சென்று அன்றைய பாடங்களை தனியாக ஒரு நோட்டு போட்டு எழுதி வைத்து பாய்க்கு சொல்லி கொடுப்பார். ஆனால் பாவம், அவர் படித்து தேர்வு எழுதியிருந்தால் கூட அந்த வயதுக்கு பிறகும் பெரிய ஆளாக வந்திருப்பார்.
இவ்வளவு முயற்சி எடுத்தும் அவருக்கு கிடைத்தது என் அம்மாவிடம் இருந்து "புஸ்தகத்த வாங்கிண்டு போய்ட்டாரா பிராம்மணன். இனி நீ படிச்சு உருப்டாப்பலதான். அவன் ஒரு வருஷமாவது fail ஆனா தான் நீ ஒழுங்கா படிக்க முடியும் போலருக்கு" என்ற வசவு தான்.

வருடங்கள் ஓடியதில், பிள்ளைகள் ஒவ்வொருவராக தனி வீடு கட்டிக்கொண்டும், வேலை நிமித்தமாக வேறு ஊர்களுக்கும் சென்ற பிறகு மாமாவும் மாமியும் மட்டும் தனியாக இருக்க ஆரம்பித்தார்கள். ஆனாலும் அவரது குசும்பும் தோரணையும் சிறிதும் மாறவில்லை. இப்படி நாட்கள் சென்று கொண்டிருந்த போது ஒரு நாள் மாமா இறந்து போனார். அவருடைய பதின்மூன்றாம் நாள் காரியத்திற்கு சமையல் நடக்கும் இடத்தில் கண்டது - அடுக்கி வைக்கப்பட்டிருந்த நான்கு முட்டை கோசும் சில அழுகிய தக்காளிகளும்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

ஒரு கிணறும் இரண்டு சிமெண்ட் தொட்டிகளும்

முன்குறிப்பு: 1980 - ம் வருடத்திற்கு பிறகு பிறந்தவர்களுக்கு இவை புதிதாக இருக்கலாம்!

எங்கள் வீடு இருக்கும் தெருவிலேயே எங்கள் வீடு தான் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கும் ஒரே வீடு. எங்களுடையது நீ...ள் சதுரமான மனையில் அமைந்த வீடு. மனையின் ஆரம்பத்தில் ஒரு சிறிய வீடும் அதை தொடர்ந்து பெரிய தோட்டமும் அதன் பின்னால் ஒரு வற்றாத கிணறும் இருந்தது.

இந்த கிணறு தான் எங்களின் நீர் நிலை ஆதாரம். அப்போது வீட்டின் குளியலறையில் ஒரு சிமெண்ட் தொட்டி உண்டு. நான் சிறு குழந்தையாக இருக்கும் போது, என் அம்மா மற்றும் இரண்டு அக்காக்களும் அந்த கிணற்றிலிருந்து நீர் இறைத்து சிமெண்ட் தொட்டியில் நிறைப்பதைப் பார்த்திருக்கிறேன்.

காலம் ஓடியதால் ஏற்ப்பட்ட மாற்றத்தில் சேர்ந்தது, மற்றும் ஒரு தொட்டியும் தண்ணீர் இறைக்க நானும்.
பல சமயம் விரும்பாமலும் சில சமயம் விரும்பியும் நாங்கள் செய்த வேலை நீர் இறைப்பது. ஆனால் நாங்கள் அனைவரும் 'பணி நிறுத்தம்' செய்தாலும் என் அம்மா மாட்டும் முகம் மாறாமல் எங்கள் அனைவருக்கான நீரையும் இறைப்பார்.

பல விடுமுறை நாட்கள் சிமெண்ட் தொட்டியினை சுத்தம் செய்வதில் கழியும்.
அந்தக் காலங்களில் நான், என் அம்மா, மற்றும் அக்காக்களும் ஒன்றாய் இருந்த குடும்ப நேரங்கள் நிறைய. அதில் பலவும் இந்த நீர் இறக்கும் நேரங்கள் தான். கிணற்றில் இருந்த ராட்டினமும், அதன் க்ரீச் ஒலியும், தாம்புக் கயிறும், அதில் மாட்டிய வாளியும், நீண்ட பாரம் சுமந்த நடைகளும், அந்த இரு சிமெண்ட் தொட்டிகளும் என் நினைவில் என்றும் மாறாதவை.

காலம் மேலும் ஓட, இரு அக்காக்களும் திருமணம் ஆகி சென்றனர். அப்போது தான் எங்கள் வீட்டிற்க்கு மோட்டார் பும்ப்பும் குழாயில் நீரும் பாங்கில் வேலை செய்த என் அண்ணனால் வந்தது. ஆனால் அது என் அம்மா உடல் நலம் குன்றி நடை குறைந்த பின்னால் வந்தது எனக்கு இன்று வரை மிகுந்த குறை தான்!

குழாய் நீர் வந்த பிறகு தொட்டிகளுக்கு இருந்த மவுசு குறைந்தது. அவை மெதுவாக புழக்கடைக்கு வந்து, பின்னர் ஒரு பக்கம் உடைந்து, நாளடைவில் யாரும் உணராத ஒரு தருணத்தில் குப்பைக்குச் சென்றன. ஆனாலும், கிணறு அப்படியே இருந்தது. எனக்கு அதன் மேல் இருந்த பாசத்தால் அடிக்கடி சென்று அதை நலம் விசாரித்து வருவேன்.

மேலும் காலம் சுழன்றது. நானும் திருமணமாகி போனபின், அம்மா வீட்டுக்கு வரும்போதெல்லாம் என் பிரியமான கிணற்றையும் நலம் விசாரித்துக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம், என் மகளையும் உடன் அழைத்துச் சென்று, அவள் அறிந்திராத கிணற்றையும், ராட்டினத்தையும், தண்ணீர் இறைக்கும் முறையையும் காண்பிப்பேன். அவளும் அதை ஆச்சரியமாகப் பார்ப்பாள். அவள் அவ்வாறு பார்க்கும் போதெல்லாம் என் பிரியமான தோழியை அவளுக்கு அறிமுகப்படுத்திய மகிழ்ச்சி கிடைக்கும்.

சமீபத்தில், அந்த கிணற்றைப் பகிர்ந்து கொண்டிருந்து அடுத்த வீட்டுக்காரரின் வேண்டுகோளின் பேரில் என் அப்பா அந்தக் கிணற்றை மூடிவிட்டார். சென்றமுறை வீட்டிற்கு சென்றபோது கிணற்றடியை சென்று பார்த்தேன். ஏனோ, இறந்த என் தோழியின் உடலை பார்ப்பது போலிருந்தது!