திங்கள், 21 செப்டம்பர், 2009

கொலு அழைப்பிதழ்

எல்லாருக்கும் வணக்கம்.
இந்த வருஷமும் எங்க வீட்ல விமரிசையா (எங்க அளவுல) கொலு வெச்சாச்சு.

இந்த அழைப்பையே எங்களோட தனிப்பட்ட அழைப்பாகக் கருதி நீங்க எல்லாரும் வெத்தல பாக்கு வாங்கிக்க வந்திருந்து இந்த நவ ராத்ரிய சிறப்பிச்சு தரனும்முன்னு கேட்டுக்கறோம்.

நன்றி!

புதன், 9 செப்டம்பர், 2009

ஒரு தொலைபேசி உரையாடல்

நேற்று விஷ்வநாதன் அங்கிளுக்கு போன் செய்திருந்தேன்.
அங்கிள்: ஹலோ
நான்: அங்கிள், நான் தான்
அங்கிள் (ஒரு வினாடிக்குப் பிறகு): நான்னா? ஆத்மாவா, உயிரா, இல்ல ஒடம்பா?
நான் (சிறிது திகைத்து): 'நான்' இன்னும் இருக்க ஒரு ஆத்மா
அங்கிள்: ஓஹோ. நான் தன்தூர்ல இருக்க நானோன்னு நெனச்சேன்
நான்: நானும் தந்தூர்ல இருக்கற ஒரு 'நான்' தான். தந்தூர்ல இருக்கறதால தான் 'நான்' இன்னும் இருக்கோ?
அங்கிள்: ஹா ஹா ஹா
நான்: இல்ல ஒருவேள 'நான்' இன்னும் இருக்கறதால தான் இன்னும் தந்தூர்ல இருக்கேனோ?!!
அங்கிள்: ஹா ஹா ஹா... இருக்கலாம்! யோசிக்க வெக்கற விஷயம் தான்.


இதற்குப் பிறகு நாங்கள் பல்வேறு விஷயங்கள் பேசினோம். ஆனால் மேல் சொன்ன உரையாடல் எங்களை யோசிக்க வைத்தது!!!

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!!!

நாளை ஆசிரியர் தினம்.
ஆசிரியப் பணியின் மேல் கொண்டிருந்த தீரா ஆசையினால் எம்.சி. முடித்த பின்னரும் என்...டி யில் faculty ஆகா சேர்ந்தேன். இன்று பல்வேறு காரணங்களால் ஆசிரியப் பணியில் தொடர முடியா விட்டாலும் என்றாவது ஒரு நாள் மீண்டும் அத்துறைக்கு செல்ல வேண்டும் என்ற தாகம் என்னுள் இன்னும் இருக்கிறது. இன்று என்னுடைய எத்தனை மாணவர்கள் என்னை நினைத்துக் கொள்கிறார்களோ எனக்கு தெரியாது. ஆனால் இதோ நான் நினைத்துக்கொள்ளும் என்னுடைய ஆசிரியர்கள்!!!

  • எல்.கே.ஜி யில் எனக்கு உணவு ஊட்டி அன்பு செலுத்திய காஞ்சனா மிஸ்
  • முதல் வகுப்பெடுத்த வாசுகி மிஸ்.
  • "நீங்க என்ன ஜாதி?" என்று அறியா வயசில் நான் கேட்ட கேள்விக்கும் "நான்பெண் ஜாதி" என்று புன்னகை மாறாமல் பதில் சொன்ன சங்கமித்ரா மிஸ்.
  • அன்றே என்னுள் இருந்த தமிழார்வத்தை புரிந்து கொண்டு என்னை தமிழ்வகுப்புக்கு லீடர் ஆக்கிய ஜெயலக்ஷ்மி மிஸ்
  • ஏழாம் வகுப்பில் நான் மிகவும் வெறுத்த பள்ளியில் படித்த போதும் என் மீது அன்புசெலுத்திய ரத்னா ஜோசப் மிஸ்
  • எட்டாம் வகுப்பில் முதல் முறையாக 'கான்வென்ட்' பள்ளியின் புதியசூழ்நிலையில் சேர்ந்த போது என்னை அரவணைத்த ஆங்கில டீச்சர் ஸ்டெல்லாமிஸ்
  • எனக்கு மிகவும் பிடிக்காத பாடமான கணிதத்தை எனக்கு மிகவும் பிடிததாக்கியஉமா அக்கா
  • கண்டிப்பான மாலா மிஸ்
  • "எங்கோ பொணம் எரியுதுலே" என்றவாறு போர் அடிக்கும் ஜாக்ரபியையும் ஒருபாடமாக எங்களுக்கு கற்று தர பிரயத்தனப் பட்ட செபஸ்டின் சார்
  • container contains water, water contains molecules என்று மறக்க முடியாத படி பாடம்எடுத்த சம்பத் சார்
  • ப்ரிசம் உடைததற்க்காக என்னைக் காய்ச்சி எடுத்த பலராமன் சார்
  • ஏனோ என்னை பிடிக்காமல் போன அருணா மிஸ்
  • என் தமிழார்வத்துக்கு மேலும் ஊன்று கோலிட்ட லிடியா மிஸ்
  • ஒவ்வொரு மாணவரையும் தனித் தனியாக அறிந்திருந்த, அன்பு கொண்டிருந்த, ஆசிரியப் பணியின் மீது பெரு மதிப்புக் கொண்டிருந்த எங்கள் பிரின்சிபால் மிராசு டேவிட் சார்
  • இவர்கள் எல்லோருக்கும் மேலாக, என்னை எனக்கு உணர்த்தி, என் திறமைகளை வெளிக் கொணர்ந்த என் மதிப்பிற்குரிய ப்ரோடோ மிஸ்.

உணர்ச்சி மிகுதியில் ஓரிருவரை நான் இங்கு விட்டிருந்தாலும் அவர்களும் என் நினைவில் அவ்வப்போது வந்து போக தவறியதில்லை.

இதே போல, நான் பாடம் நடத்திய யாரேனும் ஒரு மாணவருக்கவது நான் இவ்வாறு நினைவிற்கு வந்திருப்பேனா?
இது ஒரு ஆசிரியையின் எதிர்பார்ப்பு!!!!

எது நாகரீகம்?

இது ஒரு சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்.

ஒரு நாள், நாங்கள் முன்பு குடி இருந்த வீட்டின் சொந்தக்காரருக்கு வாடகையை தர மகளுடன் சென்றிருந்தோம். அப்போது என் மகளுக்கு நான்கு வயதிருக்கும். அவர்கள் வீட்டில் எங்களுக்கு ஒரு சிறிய கப்பில் மிக்ஸ்ச்சரும் ஸ்வீட்டும் தந்தார்கள். நாங்கள் நாகரீகம் கருதி சிறிது மிக்ஸ்ச்சர் மட்டும் எடுத்துக் கொண்டு விட்டு அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது என் மகள் அவளுடைய ஸ்வீட்டை தின்று விட்டு பின்னர் எங்களுக்காக வைத்திருந்த ச்வீட்டையும் எடுத்துத் தின்றாள். நாங்கள் நாகரீகம் கருதி அங்கு ஏதும் பேசாமல் இருந்து விட்டோம். பின்னர் வெளியே வந்த பிறகு நான் அவளிடம், "யார் வீட்டிலாவது தின்பதற்கு ஏதாவது கொடுத்தால் இப்படி எல்லாவற்றயும் தின்னக் கூடாது. அது அநாகரீகம்" என்றேன். அநாகரீகம் என்றால் என்ன என்று புரியாத அவள் என்னிடம், "ஆனால் அம்மா, நாம் சாப்பிடக் கூடாது என்று அவர்கள் நினைத்தால் பின்பு எதற்கு அவற்றை நம்மிடம் கொடுத்தார்கள்?" என்று கேட்டாள்.

அன்று முதல் முறையாக, நாகரீகத்தைப் பற்றி நாம் தவறான கருத்துக்கள் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணினேன்.

படித்ததில் பிடித்தது

தங்கமணியும் ரங்கமணியும்!!
இங்கே கிளிக் செய்யவும்