வியாழன், 23 டிசம்பர், 2010

சுனிதா சாமி யமுனா சாமி

என் ஸ்கூல் friends சுனிதாவும் யமுனாவும். அவங்க எப்படி எங்களுக்கு சாமி ஆனாங்கங்கறது தான் இந்த கதை.

நான் எட்டாப்பு படிக்கும்போது (அட சத்தியமா படிச்சேங்க, நம்புங்க!) எங்க பள்ளிகோடத்துல மெர்சி மிஸ் மெர்சி மிஸ் னு ( ரெண்டு பேர் இல்லீங்க ஒருத்தர் தான்) ஒரு கணக்கு டீச்சர் இருந்தாங்க. ரொம்ப நல்லவங்க. (சத்தியமா தாங்க). என்ன, கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். பொம்பள பசங்க பாய்ஸ் கூட பேசக்கூடாது, ஸ்கூலுக்கு வெளிய நின்னு அரட்டை அடிக்க கூடாதுன்னு சின்ன சின்ன விஷயம்லாம் எதிர் பார்ப்பாங்க. எங்க கிளாசுக்கு அப்போ அவங்க கணக்கு எடுக்கல.

அந்த காலத்துல எல்லாம் நாங்க ரொம்ப நல்ல பசங்க (உஷ்... யாரங்க சிரிக்கறது?) அப்டியாப்பட்ட நேரத்துல, ஒரு நாள் ஸ்கூலுக்கு வெளிய நானும் என் பிரெண்ட் சுனிதாவும் யமுனாவும் நின்னு பேசிக்கிட்டிருந்தோம். ஏதோ அறியாத வயசு, கொஞ்சம் சத்தமா சிரிச்சு பேசிட்டிருந்தோம். அப்போ திடீர்னு இந்த ரெண்டு பய புள்ளைகளும் அமைதி ஆயிடுசுக. இதுல இருக்க வில்லங்கம் தெரியாத நானு, செரி அவுகளுக்கு தானே சிரிப்பு நின்னு போச்சு, நமக்கு இன்னும் வருதுல்லன்னு continue பண்ணேன். அடுத்த நாள் ஸ்கூலுக்கு போனா, மெர்சி மிஸ் கூப்டனுப்பினாகன்னு தாக்கல் வந்துச்சு. நமக்கு தான் building strong basement weak ஆச்சே. ஒதரிகிட்டே ஒரு மாதிரி போய் நின்னேன். உடனே மிஸ் என்ன பார்த்து, "இப்படி தான் ரோட்ல நின்னு சிரிக்கறதா? பொம்பள புள்ளைக்கு அடக்கம் வேணாம். சுனிதா சாமி யமுனா சாமின்னு" திட்டினாங்க. அப்போ தான் எனக்கு புரிஞ்சுது இந்த பய புள்ளைக என்ன மட்டும் மாட்டிவிட்டுட்டு அதுக ரெண்டும் s ஆயிடுசுகன்னு. இதென்னடா வம்பா போச்சு, ரோட்ல நின்னு சிரிக்கலன்னா அவங்க சாமி ஆயிடுவாங்களா? மிஸ்ஸுக்கு தான் சுனிதா மேலயும் யமுனா மேலயும் என்ன நல்ல மதிப்பு. நாம தான் சாமியாகர வாய்ப்ப எழந்துட்டோம் னு ஒரு வருத்தமா போச்சு. இப்படியா யோசிச்சுக்கிட்டு நான் பேந்த பேந்த நிக்கவும், மிஸ் "சரி போ. இனிமே இப்படி பண்ணாதேன்னு" அனுப்பி விட்டுட்டாக. (என்ன punishment கெடைச்துன்னு ஆவலா படிச்சுக்கிட்டு இருந்தவங்களுக்கெல்லாம் - பல்பு)

ஆனாலும், எனக்கு அவங்க ரெண்டு பெரும் சாமியானதும் நான் ஆகாததும் கொஞ்சம் வருத்தம் தான். கிளாசுக்கு வந்து இத மத்த பசங்க கிட்ட சொன்னதும் எல்லாரும் கொஞ்ச நேரம் முழிச்சுட்டு (ஏதோ நான் மட்டும் தான் முழிச்சேன்னு நீங்க நெனைச்சுட கூடாது இல்ல) அப்புறம் யாரோ ஒரு அறிவு ஜீவி (யாருன்னு ஞாபகம் இல்ல) சொல்லிச்சு அது "சுனிதா சாமி யமுனா சாமி" இல்ல. அது "சுனிதா saw me யமுனா saw me" னு. அப்புறம் தான் எனக்கு போன உசுரே திரும்பி வந்துச்சு. இப்டி தான் என் friends சுனிதாவும் யமுனாவும் எங்களுக்கு சாமி ஆனாங்க.

டிஸ்கி: இது நடந்து ரெண்டு வருஷம் கழிச்சு, நான் பத்தாப்பு படிக்கும் போது இதே மிஸ் எங்களுக்கு கணக்கு டீச்சர். அப்போ நான் தான் அவங்க favourite ஸ்டுடென்ட். (அட..யாரங்க விழுது விழுந்து சிரிக்கறது. பார்த்து அடி கிடி படப்போகுது. சொன்னா நம்பனும். இப்டி சந்தேகம்லாம் படப்பிடாது. ) கண்டிப்பா இத உண்மையான்னு தெரிஞ்சே ஆகணும்னு நெனைக்கறவங்க, என் friend MSK கிட்ட கேளுங்க. ஒரு நாள் answer ஷீட்ட distribute பண்ணிட்டு, மிஸ் Dr Jekyll and Mr Hyde ஆ மாறி ஒரு பக்கம் MSK வ கொதறி தள்ளிக்கிட்டு இன்னொரு பக்கம் என்ன கொஞ்சின கதைய கண்ணீர் கதையா சொல்லுவான். அப்பவாவது நம்பறீங்களா பார்க்கலாம். என்ன MSK ஞாபகம் இருக்கா?

செவ்வாய், 19 அக்டோபர், 2010

எந்திரன் பார்த்த பின் என் மனதில் தோன்றிய சில "நன்றாக இருக்கும்" எண்ணங்கள்!

டிஸ்கி: இவை என் சொந்த கருதுதுக்கள் மட்டுமே. நான் என்ன சின்னதிரைலையா வந்து விமர்சனம் சொல்றேன். என் ப்ளாக் தானே எழுதறேன். விடுங்க விடுங்க பாஸ்! ஏதோ முந்நூறு ரூபா ஒரு டிக்கெட் க்கு கொடுத்த வேகத்துல எழுதறேன். என்ன தான் தலைவருக்காக படத்த ரசிச்சாலும் பாழும் மனசு சும்மாவிடுதா.
  • ரஜினிகாந்த், இனி அமிதாப் பச்சன் போல தன வயதுக்கு தகுந்த பாத்திரங்களில் மட்டுமே நடித்தால் நன்றாக இருக்கும்.
  • தமிழ் திரை உலக பாடலாசிரியர்கள் இனி தங்கள் பாடல் வரிகள் புரியுமாறு இசைஅமைத்தால் மட்டுமே A R ரஹமானின் இசையமைப்பில் பாடல்கள் எழுதுவோம் என்று அறிவித்தால் நன்றாக இருக்கும்.
  • A R ரஹமான் வெறும் synthesizer - மட்டும் நம்பாமல், நம் பாரம்பர்யம் மிக்க தாளவாதியங்கள் மற்றும் தந்தி வாதியங்களையும் உபயோகித்தால் நன்றாக இருக்கும். (என்ன இருந்தாலும் ராஜா ராஜா தான்!)
  • சூப்பர் ஸ்டார் தான் உபயோகிக்கும் லிப் ஸ்டிக்கின் அளவை குறைத்தால் நன்றாக இருக்கும்.
  • இயக்குனர் ஷங்கர், தன முந்தைய படங்களான முதல்வன் மற்றும் இந்தியனில் இருந்தது போல costume களில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். (ஐஸ்வர்யா ராயின் உடைகள் சகிக்கவில்லை!)
  • சந்தானம், பாஸ் என்கிற பஸ்கரனில் நடித்தது போல நல்ல சிரிக்க மற்றும் ரசிக்கத் தகுந்த பாத்திரங்களில் மட்டும் நடித்தால் நன்றாக இருக்கும்.
  • கடைசியாக, (last but definitely not the least), ஐஸ்வர்யா ராய் தயவு செய்து நடிப்பதை நிறுத்தினால் நன்றாக இருக்கும். ஹ்ம்ம்... நாம ஆசைப் படரதேல்லாம் நடந்துடுதா என்ன!

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

எதையும் ஒரு முறை

என்ன சுஜாதாவோட நாவல் டைட்டில் மாதிரி இருக்கேன்னு யோசிக்கறீங்களா?
அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க, இது நம்ம சொந்த கதை சோகக்கதை.

எங்க வீட்டு தங்கமினிக்கு எப்பவும் அம்மாவுக்கு தான் எல்லாம் தெரியும்னு ஒரு நெனப்பு. அவங்க அப்பா சொன்னா கூட ஒரு தடவ என் கிட்ட கிராஸ் செக் செஞ்சுப்பா. எதுவா இருந்தாலும் என்னை தான் நம்ம்ம்பி கேப்பா. எதையும் ஒரு முறை (அப்பாடி! டைட்டில் வந்துருச்சு.) என் வாயால கேட்டா தான் அவளுக்கு திருப்தி.

இது இப்படி இருக்கறப்போ, ஒரு சுப யோக சுப தினத்துல அவங்க மிஸ் (அவங்களுக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்!) ஒரு இந்திய பொலிடிகல் மேப்ப குடுத்து, அதுல எல்லா ஸ்டேட் capitals உம் மார்க் பண்ணி எடுத்துட்டு வர சொன்னாங்க. அவங்க அப்பா, "நான் ஹெல்ப் பண்றேன்"னு சொன்னதுக்கு கூட, மினி, இல்லப்பா எதுக்கும் அம்மா வந்துடட்டும்னு சொன்னா. அப்பவே, ரசத்துக்காக கரைசுக்கிட்டுருந்த புளி, என் வயத்துலயும் கரைய ஆரம்பிச்சுடுத்து. நானும் நல்ல மாதிரி, "இல்லம்ம்மா, அம்மா பிஸியா இருக்கேன்ல, அப்பா கிட்ட கேட்டுக்கோன்னு" சொன்னேன். ஆனா அவ ரொம்ம்ம்ப தெளிவா இருந்தா - நீ வந்த மேப்பு, இல்லேன்னா வெளையாட கேப்புன்னு. எந்த ஸ்டேட் க்கு எந்த கேபிடல் னு தெரியுமே ஒழிய, அந்த கேபிடல் மேப்புல எங்க இருக்குன்னு எல்லாம் கேப்பாங்கன்னு நான் கண்டேனா? இதுக்கு தான் படிக்கற வயசுல ஒழுங்கா படிக்கணும்கறது. அந்த காலத்துல, 10th எக்ஸாம்க்கு முன்னாடி, ப்ரோடோ மிஸ் என்னை பார்த்து "விஜி, நீ டைம் இருந்தா மேப் அட்டெம்ப்ட் பண்ணு இல்லன்னா விட்டுடு" னு சொன்னதுக்கு அர்த்தம் இப்ப தான் தெரிஞ்சுது.

சரி, விதி வலியதுன்னு நானும் போய், உதாரா நமக்கு தெரிஞ்ச நாலஞ்சு எடத்த சரியா மார்க் பண்ணி குடுத்துட்டேன். அப்புறம், "ஏம்மா, எதுக்கும் அந்த அட்லஸ் எடு. சரியாய் பார்த்து எழுதிடலாம்னு" சொன்னேன். அதுக்கே ஒரு மாதிரி பார்தவ, நான் அட்லஸ் அ தேடி பார்த்ததை பார்த்துட்டு விட்டாளே ஒரு லுக்! ஹ்ம்ம்.. என்னமோ போங்க. போற போக்க பார்த்தா, நான் வேலைய விட்டுட்டு, history geography எல்லாம் மோதல்லேருந்து ஒரு தடவ படிச்சு வெச்சுக்கறது நல்லதுன்னு தோணுது. பார்ப்போம்!

டிஸ்கி: இந்த பதிவுக்கு "மேப்பு வெசுட்டாய்யா ஆப்புன்னு" உம் ஒரு டைட்டில் யோசிச்சேன். அப்புறம், சுஜாதாவா இல்ல வடிவேலுவான்னு ஒரு சின்ன மனப்போராட்டதுக்கப்புறம், சுஜாதா தான்னு (ஹி...ஹி.. எப்பவும் போல) முடிவுக்கு வந்துட்டேன்.

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

திருச்சி ட்ரிப் - பார்ட் 1

சரி, ஸ்ரீரங்கத்த பத்தி எழுதின கையோட திருச்சி ட்ரிப் பதியும் எழுதிடுவோம் ஒரு வேகம்.
வைகுண்ட ஏகாதசிக்கு மொத நாள் நான் ஏற்கனவே சொன்னா மாதிரி திருச்சி ட்ரிப் அடிப்போம்னு கெளம்பினோம். எங்கே போறதனாலும் கார்லயே போய்டறது ஒரு சௌகர்யம் தான்.
பெங்களூர்ல கெளம்பி, ஹோசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் வழியா போகலாம்னு ரூட் மேப் எல்லாம் ரெடி பண்ணிண்டு கெளம்பினோம். எங்களோட எல்லா இழுப்புக்கும் எங்க வீட்டு தங்க'மினி' தயாரா இருப்பது ஒரு பெரிய ஆறுதல். இந்த சந்தர்ப்பத்துல அவளுக்கு ஒரு பெரிய 'நன்றி'.

முதல் ஸ்டாப் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்ல நிறுத்தினோம். மத்தியான நேரத்துல போனதால பூஜை எல்லாம் பார்க்க முடியல. ஆனா ஆஞ்சநேயர் திறந்த வெளில நிற்பதால் தரிசனம் நல்லா கெடைச்சது. இங்கே இருக்கற ஆஞ்சநேயர் வளர்ந்துண்டே இருப்பதால் அவருக்கு கூரை கோபுரம் எல்லாம் இல்லைன்னு கேள்வி பட்டிருந்தேன். இதப்பத்தி அங்கே இருந்த ஆபீசில ஒருத்தர் கிட்ட விசாரிச்சேன். ஆனா அவர் இதெல்லாம் டூப் என்றும் ஆஞ்சநேயர் அப்படி எல்லாம் வளர்வது இல்லைன்னும் சொன்னார். ஆஞ்சநேயருக்கு எதுத்தாப்போல இருக்க மலையே நரசிம்ம சொரூபம்னும், அப்படிப்பட்ட நரசிம்மருக்கே கூரையோ கோபுரமோ இல்லாத போது இவர்க்கு கட்டக்கூடதுன்னும் தான் கூரை இல்லையாம்.

இந்த சமயத்துல தான், நம்ம 'மினி', "அம்மா, இந்த ஆஞ்சநேயருக்கு மாலை போடணும்னா ஒரு பக்கம் தான் படி வெச்சு கட்டியிருக்காங்க. அப்போ எப்டி மாலய எட்டி முழுசா போடுவாங்க?", "அம்மா, இந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாத்தனும்னா எவ்ளோ லிட்டர் பால் வேண்டியிருக்கும்?" னு டெக்னிகலா கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டா. (நான் மனசுக்குள்: உக்கும்... இந்த கேள்வியெல்லாம் உங்க அப்பா கிட்ட கேக்க வேண்டியது தானே). நான் உடனே, சரிடப்பா ஆஞ்சநேயா. இந்த கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்லனும்னா, நீ என்னோட அறிவ அளவில்லாம வளர்க்கணும். அது உனக்கும் ரொம்ப கஷ்ட்டமான விஷயம். அதனால உத்தரவு வாங்கிக்கறேன்னு, அங்கேந்து கெளம்பினேன்.

ரங்கமணிக்கு, வெயிட் பண்ணி நாலு மணிக்கு நரசிம்மர் கோயில் தரிசனம் பார்த்துட்டு கிளம்பனும்னு ஆசை. ஆனால், அதுக்கப்புறம் கெளம்பினா லேட் ஆயிடும்னு அவரை ஒரு வழியா சமாதனா படுத்த முயற்சி பண்ணி, அது தோத்து போய், அதுக்கப்புறம் நானே நரசிம்ம அவதாரம் எடுத்தப்புறம் தான் கிளம்பினார்.
அங்கேருந்து கெளம்பி வழியில குணசீலம் பெருமாள தரிசனம் பண்ணோம்.
(நீங்கல்லாம், சரியான எடத்துக்கு தான் போயிருக்கான்னு சொல்றது காதுல விழுது. சரி, சரி... நோ சில்லி பீலிங்க்ஸ்)

அப்புறமா ரொம்ப ஆர்வமா காவேரிய பாக்கணும்னு கெளம்பி திருச்சி போனோம். அங்கே தேசலா ஓடிக்கிட்டுருந்த காவேரிய பார்த்து ரொம்ப வருத்தமாயிடுச்சு. என்ன தான் நாங்க பெங்களூர்ல இருந்தாலும், நாங்க பண்றது எங்களுக்கு அநியாயமா தான் இருக்கு. என்ன பண்றது!

சரி. ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கறேன். மீதி பார்ட் டூ ல தொடர்ரேன்.
வர்ட்டா!!

வியாழன், 15 ஏப்ரல், 2010

ஸ்ரீரங்கம், ரங்கநாதன், மற்றும் நான்

நாங்கல்லாம் காஞ்சீபுரதுக்காரா. ஸ்மார்த்தா. எங்க அப்பா வீட்டு குல தெய்வம் பிரளயம் காத்த ஷக்தி. இவள் ஏகாம்பரேஸ்வரர் கோயில் ப்ராகாரத்துல ஜம்முனு உக்காந்து இருப்பா. எங்க இஷ்ட்ட தெய்வம் காமாக்ஷி அம்மன்.

இதையெல்லாம் தாண்டி, ஸ்ரீரங்கத்துல அனந்த சயனதுல இருக்க ரங்கநாதர் மேல எனக்கு எப்பவுமே ஒரு ஈர்ப்பு.
அது பக்தியா, பாசமா, அன்பா, பயமா, காதலான்னு தெரியாத ஒரு உணர்வு.
எப்போ நான் அங்கே போனாலும் என்னை priority basis கூப்பிட்டு சௌக்கியமான்னு விசாரிப்பார். அது எவ்ளோ கும்பலா இருந்தாலும் சரி. ஏதோ ஒரு வழில நமக்கு சிறப்பு தரிசனம் தான்.
இந்த வருஷம், நம்ம வீட்டு ரங்கமணிக்கு என்ன தைர்யம்னு தெரியல. வைகுண்ட ஏகாதசி அப்போ, எந்த ரூம் reservation உம் பண்ணாம திடீர்னு கெளம்பு திருச்சி போகலம்ன்னார். மத்த எடம்னா, reservation இல்லாம கெளம்ப மாட்டேன்னு அடம் பிடிப்போம். ஆனா, ஸ்ரீரங்கமன்தும், நாமும் ரங்கநாதர பாக்கற ஜோர்ல கெளம்பிட்டோம்.
அங்க போய் ரூம் கெடைக்காம ஸ்ரீரங்கம் தெருவெல்லாம் சுத்தினத தனி பதிவாத்தான் போடணும்.
இப்போ ரங்கநாதருக்கு வருவோம்.
கோயிலுக்கு போனா அங்க அனுமாரும் வந்திருக்கார் போல. நாங்க அவர் வால மட்டும் தான் பார்த்தோம். queue ரூபத்துல!
நம்மால ரொம்ப நேரம் நிக்க முடியாது ன்னு தெரிஞ்சு ரங்கமணி போய் ரெண்டு ஐநூறு ருபாய் டிக்கெட் வாங்கி வந்தாரு.
(நிக்க வெச்சா வெயில் காலத்துல நாமும் வருதேடுப்போம்னு இந்த பத்து வருஷத்துல தெரிஞ்சிருக்கும்ல!)
ஆனா அந்த ஐநூறு ருபாய் queue வுக்கும் நல்ல கும்பல்.
ஆனா அது என்ன மாயமோ தெரியல, நான் கிட்ட போனதும், நம்ம ஸ்ரீரங்கம் ரங்கஸ், நமக்குன்னு எடத்த கிளியர் பண்ணி விட்டுட்டாரு.
கிட்ட போய் நின்னு, அந்த gigantic உருவத்த பாத்தா, ஹ்ம்ம்....
ரங்கநாதா, ரெண்டாம் பத்தில சொன்னா மத்த உணர்வெல்லாம் எங்கே வருது. எங்கே நீ கண்ண குத்திடுவியோன்னு ஒரு பயம் கலந்த பக்தி தான் வருது.
ஆனா, பார்த்துட்டு திரும்பி வந்த மறு நிமிஷம், back டு para 2
இந்த தடவ, நமக்கு ஸ்பெஷல் முத்தங்கி சேவை தரிசனம் வேற குடுத்தாரு.
ஆஹா என்ன அழகு! இந்த அழகுக்கு அவர சுத்தியும் பன்னிரண்டு நாச்சியார் மட்டுமே இருப்பது ரொம்ப கொறச்சல் தான்.
ரங்கநாதர் தரிசனம் முடிச்சு, கோயில் வாசல்ல, ரங்கமணி மொறைக்க மொறைக்க (இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா நமக்கு), ஒரு இரும்பு தவா, கல் சட்டி எல்லாம் வாங்கி முடிச்சு ஸ்ரீரங்கம் தெருவெல்லாம் சுத்தினோம்.
ரங்கமணிய, அடையவளஞ்சான் வீதி எதுன்னு விசாரிக்கச் சொன்னேன். அவரும் நாம யாரையோ பாக்கணுமோ, இல்ல எதாவது கோயில் இருக்கோன்னு நெனைச்சு ரொம்ப பொறுப்பா விசாரிச்சு கூட்டிட்டு போனாரு. கடைசில ரொம்ப கடுப்பயிட்டாறு. அது ஏன்னு கடைசில சொல்றேன்.
இப்படியே தேரடி, வடக்கு சித்திரை வீதின்னு சுத்தினோம்.
நம்ம நண்பர்களான மாஞ்சு, ரங்கு, ரா.வி.ரா, பத்தணா அய்யங்கார் எல்லாரையும் நெனைச்சிக்கிட்டேன்.
ரங்கமணி கிட்டயும் இதப்பத்தி எல்லாம் பேசிக்கிட்டே வந்தேன்.
(இவிங்க எல்லாரும் யாரு, இவிங்களுக்கு உன்ன தெரியுமான்னு கேக்கப்பிடாது. எனக்கு IG தெரியும் ஆனா அவருக்கு என்ன தெரியாதுங்கரா மாதிரி தான் இதுவும்)
மேல சொன்னா இடங்களும் ஆட்களும் பலருக்கும் பரிச்சயமானது தான்.
இதெல்லாம் சுஜாதாவோட ஸ்ரீரங்கத்து அடையாளங்கள்.
ரங்கநாதர் மேல இருக்க ஈர்ப்பால சுஜாதாவ பிடிச்சு அதனால் ஸ்ரீரங்கம் என் உணர்வுல கலந்துதா.
இல்ல சுஜாதாவால ஸ்ரீரங்கத்து மேலயும் ரங்கநாதர் மேலயும் ஈடுபாடு வந்துதான்னு இன்னி வரைக்கும் என்னால கண்டு பிடிக்க முடியல.

ஆனா, ஸ்ரீரங்கமும், ரங்கநாதரும் எப்பவும் என்னை ஈர்ப்பது நிஜம்.

இப்போ ரங்கஸ் ஓட கோவத்துக்கு காரணம் சொல்லிடறேன்.
ரொம்ப ஆர்வமா அடையவளஞ்சான் வீதிய கண்டு பிடிச்சி இப்போ எங்கே போகணும்னு கேட்டாரு.
நான், அங்கே ஃபுல்லா சுத்த விட்டுட்டு கடைசில, சும்மா சுஜாதாவோட ஸ்ரீராங்கத்த சுத்தி பார்க்கணும்னு தான் கேட்டேன்னு சொன்னேன்.
மனுஷன் கடுப்புல வெந்து நொந்துட்டாறு.
செம பசியில இருக்கும் போது இது தேவையான்னு ஒரு வார்த்த, ஒரே ஒரு வார்த்த தாங்க சொன்னாரு.
நமக்குள்ள சிநேகமா இருந்த சிங்கத்த சீண்டிப்பார்துட்டாறு இல்ல. அது சும்மா விடுமா? எப்படி நான் என் சுஜாதாவோட ஸ்ரீராங்கத்த சுத்தி பார்க்கற போது இப்படி சொல்லப்போச்சுனு வந்துதே ஒரு கோவம்.
அப்புறம் என்ன, ஸ்டார்ட் மீசிக் தான்!

ரொம்ப நாளா மறந்து இருந்த அவரோட favourite டயலாக் மறுபடியும் சொல்ல ஆரம்பிச்சுட்டார்.
என்னது? அது என்னவா? அது "எப்பவுமே அவளோட first love சுஜாதா தான். அதுக்கப்புறம் தான் நான்!"